வாழ்க அந்தணர்

வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல்லாம் அரன் நாமமே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே.

காத லாகிக் கசிந்து

காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி
ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது
வேத நான்கினும் மெய்ப்பொரு ளாவது
நாதன் நாமம் நமச்சி வாயவே.

மண்ணில்நல் லவண்ணம் வாழலாம்

மண்ணில்நல் லவண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில்நல் லகதிக்கு யாதுமோர் குறைவிலைக்
கண்ணில்நல் லஃதுறும் கழுமல வளநகர்ப்
பெண்ணில்நல் லாளொடும் பெருந்தகை யிருந்ததே.

மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை

மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை வரிவளைக் கைம்மட மானி
பங்கயச் செல்வி பாண்டி மாதேவி பணிசெய்து நாள்தொறும் பரவ
பொங்கழ லுருவன் புதநா யகனால் வேதமும் பொருட்களும் அருளி
அங்கயற் கண்ணி தன்னொடும் அமர்ந்த ஆலவா யாவதும் இதுவே.


மந்திர மாவது நீறு

மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திரு ஆல வாயான் திருநீறே.


வேதத்திலுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு உண்மையில் உள்ளது நீறு
சீதப் புனல்வயல் சூழ்ந்த திரு ஆல வாயான் திருநீறே.


முத்தி தருவது நீறு முனிவ ரணிவது நீறு
சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு
சித்தி தருவது நீறு திரு ஆலவாயான் திருநீறே.


பிடியதன் உருவுமை

பிடியதன் உருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே.

தோடுடைய செவியன்

தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடி
காடுடைய சுடலைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்
ஏடுடைய மலரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த
பீடுடைய பிரமாபுரமேவிய பெம்மானிவனன்றே


உரை
தோடணிந்த திருச்செவியை உடைய உமையம்மையை இடப்பாகத்தே உடையவனாய், விடை மீது ஏறி, ஒப்பற்ற தூய வெண்மையான பிறையை முடிமிசைச்சூடி, சுடுகாட்டில் விளைந்த சாம்பற் பொடியை உடல் முழுதும் பூசி வந்து என் உள்ளத்தைக் கவர்ந்தகள்வன், இதழ்களை உடைய தாமரை மலரில் விளங்கும் நான்முகன், படைத்தல் தொழில் வேண்டி முன்னை நாளில் வழிபட அவனுக்கு அருள்புரிந்த பெருமை மிக்க பிரமபுரத்தில் எழுந்தருளியுள்ள பெருமானாகிய இவன் அல்லனோ!

பித்தாபிறை சூடீ

பித்தாபிறை சூடீபெரு
மானேயரு ளாளா
எத்தான்மற வாதேநினைக்
கின்றேன்மனத் துன்னை
வைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
நல்லூரருட் டுறையுள்
அத்தாஉனக் காளாய்இனி
அல்லேனென லாமே.

சிவபுராணம்

திருசிற்றம்பலம்
நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க
இமைப்பொழுதும் என்நெஞ்சி னீங்காதான் தாள்வாழ்க
கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க
ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க
ஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க 5

வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழுங் கோன்கழல்கள் வெல்க
சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க 10

ஈச னடிபோற்றி எந்தை யடிபோற்றி
தேச னடிபோற்றி சிவன்சே வடிபோற்றி
நேயத்தே நின்ற நிமல னடிபோற்றி
மாயப் பிறப்பறுக்கும் மன்ன னடிபோற்றி
சீரார் பெருந்துறைநம் தேவ னடிபோற்றி 15

ஆராத இன்பம் அருளுமலை போற்றி
சிவனவன்என் சிந்தையுள் நின்ற அதனால்
அவனரு ளாலே அவன்தாள் வணங்ங்கிச்
சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை
முந்தை வினைமுழுதும் மோய உரைப்பனியான் 20

கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சி
விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்
எண்ணிறந் தெல்லை யிலாதானே! நின்பெருஞ்சீர்
பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன் 25

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள் 30

எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்
உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே 35

வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா
பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி
மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே 40

ஆக்கம் அளவிறுதி இல்லாய் அனைத்துலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே
மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே 45

கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று
பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்க ளேத்த
மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50

மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அருங்கயிற்றாற் கட்டிப்
புறந்தோல்போர்த் தெங்கும் புழுவழுக்கு மூடி
மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை
மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய 55

விலங்கு மனத்தால் விமலா உனக்குக்
கலந்தஅன் பாகிக் கசிந்துள் ளுருகும்
நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காஅட்டி
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60

தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே! தேனா ரமுதே சிவபுரனே
பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில்வஞ் சங்கெடப் 65

பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத் தொளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கியென் ஆருயிராய் நின்றானே
இன்பமுந் துன்பமும் இல்லானே உள்ளானே 70

அன்பருக் கன்பனே யாவையுமாய் அல்லையுமாஞ்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்தென்னை யாட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்தமெய்ஞ் ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின் 75

நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே
போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே
காக்குமெங் காவலனே காண்பரிய பேரொளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக் காய்நின்ற
தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய்80

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவேஎன் சிந்தனையுள்
ஊற்றான உண்ணா ரமுதே உடையானே
வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப
ஆற்றேன்எம் ஐயா அரனேஓ என்றென்று 85

போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்ஆனார்
மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே
நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே
தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90

அல்லற் பிறவி அறுப்பானே ஓஎன்று
சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச்
சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95

திருசிற்றம்பலம்

விநாயகர் அகவல்


பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும்
இவை நாலும்கலந்து உனக்கு நான் தருவேன்
கோலம் செய் துங்க கரிமுகத்துது மணியே
நீ எனக்கு சங்க தமிழ் மூன்றும் தா






சீதக் களபச் செந்தா மரைப்பூம்

பாதச் சிலம்பு பலஇசைப் பாட
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வண்ண மருங்கில் வளர்ந்து அழகுஎறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்

வேழ முகமும் விளங்கு சிந்தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்

இரண்டு செவியும் இலங்கு பொன்முடியும்
திரண்ட முப்புரி நூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரிய மெய்ஞான
அற்புதம் நின்ற கற்பக களிறே
முப்பழம் நுகரு மூஷிக வாகன

இப்பொழுதென்னை ஆட்கொள்ள வேண்டித்
தாயாய் எனக்கு தான் எழுந்தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்தே
திருந்திய முதல் ஐந்தெழுத்தும் தெளிவாய்
பொருந்தவே வந்தேன் உளந்தனில் புகுந்து

குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்து திறம் இது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்து எனக்கருளிக்
கோடாயுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டி என்செவியில்

தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலந்தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளி
கருவிகள் ஒடுக்கும் கருத்தினை அறிவித்தே
இருவினைதன்னை அறுத்திருள் களைந்து

தலமொரு நான்கும் தந்தெனக்கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால்
ஐம்புலக்கதவை அடைப்பதும் காட்டி
ஆறாதாரத்து அங்குச நிலையும்

பேரா நிறுத்தி பேச்சுரை அறுத்தே
இடைபிங்கலையின் எழுத்தறிவித்தே
கடையிற் சுழுமுனை கபாலமும் காட்டி
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவிலுணர்த்திக்

குண்டலி அதனில் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலாதாரத்து மூண்டெழு கனலை
காலால் எழுப்பும் கருத்தறிவித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்

குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச் சக்கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடற்ச்சக்கரத்தின் உறுப்பையும் காட்டி
சண்முக தூலமும், சதுர்முக சூட்சுமமும்
எண்முகமுமாக இனிதெனக்கருளி

புரியட்ட காயம் புலப்பட எனக்கு
தெரிஎட்டு நிலையும் தெரிசனப் படுத்தி
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி இனிதெனக்கருளி
என்னை அறிவித்து எனக்கருள் செய்து

முன்னை வினையின் முதலை களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து
இருள் வெளி இரண்டிற்கு ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்து அழுத்தி என்செவியில்

எல்லையில்லை ஆனந்தம் அளித்து
அல்லல் களைந்தே அருள்வழி காட்டி
சத்தத்தினுள்ளே சதாசிவம் காட்டி
சித்தத்தினுள்ளே சில்வலிங்கம் காட்டி
அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்

கணு முற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக்கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக்கரத்தின் நிலையறிவித்து

தத்துவ நிலையை தந்தெனை ஆண்ட
வித்தக விநாயக ! விரை கழல் சரணே! ஓம்

சைவம் போற்றும் ஓர் இணைய தளம்

சைவம் பற்றி அணைத்து தகவல்களையும் - பாடல்களையும் மற்றும் காணொளிகளையும் இணைத்துள்ளனர். தமிழுக்கும் சைவத்துக்கும் நல்லதொரு சேவை.
http://www.shaivam.org